இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20.1.2022 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும் திருக்கோயில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டி எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்திடவும், அந்நூல்களை திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இப்பதிப்பகப் பிரிவின் மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டார்.
மேலும், திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் முதல்வர் கடந்த 25.04.2022 அன்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றத்தையும் பார்வையிட்டார்.
பின்னர், ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்து அச்சிட்டு வெளியிடுவதுடன், 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டுள்ள சுமார் 61,600 சுருணை ஓலைகளும், 10 செப்புப் பட்டயங்களும், 20 பிற ஓலைச்சுவடிகளை பராமரித்துப் பாதுகாத்து, எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் ஆணையர் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் ஜீயர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46 ஆவது குருமகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்க மருதாச்சால அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் என்.எழிலன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












